தமிழ்நாட்டில் நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, "விக்கிரவாண்டியில் அளிக்கப்படும் வாக்கு திமுகவா அதிமுகவா என்பதை முடிவு செய்வதற்கல்ல; தமிழ்நாட்டில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக அரசு மத்திய அரசின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆதரவளித்துவருகிறது. அது மக்கள் விரோத திட்டமாக இருந்தாலும் கண்மூடித்தனமாக ஆதரவளிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா என்பதை முடிவு செய்து வாக்களியுங்கள் என்று ட்வீட் பதிவிட்டுள்ள ரவிக்குமார் தேர்தல் பரப்புரையை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்தே தொடங்கியுள்ளார்.