சென்னை: நாகூர், வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு அடிப்படை வசதிகள் குறித்து சட்டப்பேரவையில் நாகப்பட்டினம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கூறும்போது, 'நாகூரைப் பொறுத்தவரை உலகப் புகழ்பெற்ற திருத்தலமாக உள்ளது. இங்கே பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை, சாலை வசதிகள் இல்லை பேருந்து நிறுத்தம் இருக்கிறது. ஆனால், பேருந்துகள் இயங்கவில்லை. எனவே, அங்கு வரக்கூடிய மக்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், 'ஒன்றிய அரசின் நிதி உதவி திட்டத்தின்கீழ் நாகூரில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதிகள், வடிகால் வசதிகள், உயர் கோபுர மின்கம்பி அமைக்கும் பணிகள் ஆகியவை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையைக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டப்பேரவை உறுப்பினர் ஷாநவாஸின் கோரிக்கையை பரிசீலனை செய்து விரைவில் நிறைவேற்றப்படும்' என்றார்.
தொடர்ந்து பேசிய ஆளூர் ஷாநவாஸ், 'நாகூர் மட்டுமல்ல நாகப்பட்டினத்தில் வேளாங்கண்ணி திருத்தலம் உள்ளது. நாகூரிலேயே சிங்காரவேலர் கோயில் உள்ளது. எனவே, நாகப்பட்டினத்தை மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
இதற்கு சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், 'முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 10, 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் நாகப்பட்டினத்தையும் கருத்தில்கொண்டு சுற்றுலாத்தலத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இன்னல்களும் வரும் - ராஜேந்திரபாலாஜி'