இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று மே, ஜூன் மாதங்களில்தான் உச்சத்தை எட்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இன்று முதல் சில தளர்வுகளையும், அரசு அலுவலகங்கள், சுங்கச்சாவடிகள் இயங்கவும் உத்தரவிட்டுள்ளது.
அதுபோலவே, தமிழ்நாடு அரசும் இங்குள்ள பல்வேறு தொழிற்சாலைகள் இயங்க ஏற்பாடு செய்வதாகத் தெரிகிறது. இதன் மூலம், மக்கள் கும்பலாகப் பயணிப்பதற்கும், நெருக்கமாக பணியாற்றுவதற்குமான கட்டாயம் ஏற்படும். அதன்வழி நோய்த்தொற்று அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும். அத்தகைய ஒரு கேடான சூழல் உருவாகுமேயானால், அதற்கு மத்திய-மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.
கரோனா பரவலைச் சமாளிக்கப் போதுமான முன் தயாரிப்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் மத்திய மாநில அரசுகளின் இந்தத் தளர்வு நடவடிக்கைகள், குறிப்பிட்ட சில கார்ப்பரேட் முதலாளிகளின் அழுத்தம் காரணமாகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவுமே மேற்கொள்ளப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.
மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளில் உள்ள போதாமைகள் மற்றும் குறைகளைச் சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகள் ஆற்றவேண்டிய கடமை. அதைச் செய்தால் ‘எதிர்க்கட்சித் தலைவர்களிடம் ஆலோசனை கேட்க அவர்களென்ன மருத்துவர்களா?’என்று முதலமைச்சர் கேலி பேசுவது அவரின் பொறுப்புக்கு நாகரிகமல்ல. எனவே, கரோனா தொற்று பரவும் இச்சூழலில், முதலமைச்சர் சர்வாதிகாரம் என்னும் ஜனநாயகவிரோத நோய்த்தொற்றுக்கு ஆளாகிவிடக்கூடாது ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மே 3ஆம் தேதி வரை எந்த தளர்வும் கிடையாது! - தமிழ்நாடு அரசு திட்டவட்டம்