சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “தனது வாழ்நாளெல்லாம் தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். அவரது மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிலப்பதிகாரத்தை, அதன் பெருமைகளைத் தமிழ் மக்களிடையே பரப்புவதில் மிகப் பெரும் பங்களிப்பைச் செய்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அன்போடு பெருமைப்படுத்தப்பட்டவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சித்துறை முதலான அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளை வகித்துப் பாராட்டத்தக்க வகையில் பணிபுரிந்தவர் . அவர் இயற்றமிழ் வித்தகர் ஆவார். அவரது மறைவு தமிழுக்குப் பேரிழப்பாகும்.
புலமை தளத்தில் பங்களித்தது மட்டுமின்றி தமிழ் மொழி மீது மாறாப் பற்று கொண்டு செயல்பட்டவர். மொழி உரிமை காக்கும் போராட்டக் களங்களில் முன் நின்றவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழ்ச் சான்றோர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.