டெல்லி வன்முறையைக் கண்டித்து சென்னை விருந்தினர் மாளிகை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இதில் 500-க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்றனர். அப்போது மத்திய பாஜக அரசையும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், டெல்லியில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில் பல உயிர்களை இழந்துள்ளோம். பாஜக திட்டமிட்டு இஸ்லாமியர்கள் மீது நடத்திய இனப்படுகொலை அந்த வன்முறை. இதற்குப் பின்னால் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்குத் தொடர்புள்ளது. இதற்குப் பொறுப்பேற்று அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும்.
பாஜக எம்.பி.க்களைக் கண்டித்து கருத்து கூறிய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது, வன்முறையில் பாஜகவிற்கு தொடர்புள்ளது என்பதை நிரூபிக்கிறது. நீதித் துறையில் எந்தளவு அரசியல் உள்ளது என்பதை நீதிபதி முரளிதரன் பணியிட மாற்றம் உறுதிப்படுத்தியுள்ளது“ எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'ஜனநாயகம் பரவுவதன் மூலம் வரலாற்றைக் கண்டறியலாம்' - அமைச்சர் ஜெய்சங்கர்