சென்னை: திருவல்லிக்கேணி ரோட்டரி நகரில் பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க நாள் ஊட்டச்சத்து விழிப்புணர்வு தினம் நேற்று (ஏப்.19) கொண்டாடப்பட்டது. அதில் 15-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வளையல் அணிவித்து, கீரைக் கட்டுகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு ஏப்ரல் 6 முதல் 20 ஆம் தேதி வரை சமூக நீதி, சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள்களில் அரசு திட்டத்தை பிரபலப்படுத்தி, மக்களுக்கு பாஜக நிர்வாகிகள் சேவை செய்கின்றனர். மேலும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
நம் நாட்டில் பெண்களுக்கு ரத்த சோகை அதிகம் இருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவது அவசியம் என பிரதமர் கூறுகிறார். அரசியலமைப்பு சட்டத்தில் முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் தனித்தனியே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைதான் உயர்ந்தது, நீதித்துறைதான் உயர்ந்தது அல்லது நிர்வாகத்துறைதான் உயர்ந்தது என அரசியலமைப்பு சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநரை விரோதி போல தொடர்ந்து பார்த்து வருகிறார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று ஆளுநருக்கு அவசியம் இல்லை. ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாக தமிழ்நாடு அரசு நினைத்தால் நீதித்துறை வாயிலாக கேள்வி கேட்கலாம். அப்படி இல்லாமல் தெருவில் இறங்கி போராடி ஆளுநரை அசிங்கப்படுத்துவதை தமிழ்நாடு பாஜக ஏற்காது.
தமிழ்நாட்டில் மோடியை யார் ஆதரித்தாலும் உடனே பயத்தால் ஆதரிக்கிறார்கள், பதவிக்காக ஆதரிக்கிறார்கள், ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருக்கிறார்கள் என்று கூறுகின்றனர். மோடியை தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் தமிழ்நாட்டில் விமர்சிக்கின்றனர். அப்படி என்றால் மோடியை எதிர்ப்போர் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? பிரிவினைவாத சக்திகளின் தூண்டுதலால் மோடிக்கு எதிராக பேசுகிறார்களா?" என்றார்.
இதையும் படிங்க: ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் கொடிகளை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி புகார்