இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழ்நாடு அமைச்சரவை 2018 செப்டம்பர் 9இல் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை 29 மாத கால தாமதத்திற்குப் பின்னர் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிராகரித்து இருக்கின்றார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் தாக்கல்செய்யப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரத்தில், ஏழு தமிழரின் விடுதலை குறித்து குடியரசுத் தலைவரே முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
தமிழ்நாடு ஆளுநரின் முடிவுக்கு மத்திய பாஜக அரசின் பின்னணி இருப்பது வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது.
ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக மத்திய பாஜக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை 2018, செப்டம்பர் 6இல் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, அரசியல் சட்டப் பிரிவு 161ஆவது பிரிவின் கீழ் தமிழ்நாடு அரசே முடிவு எடுக்கலாம் என்று தீர்ப்பளித்தது.
அதன்பின்னர்தான் செப்டம்பர் 9 இல் தமிழ்நாடு அரசு ஏழு பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தைக் கேட்க அனுப்பியதாகத் தகவல் வந்தது.
மீண்டும் இதே வழக்கில் ஏழுபேர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 2019, மே 9ஆம் தேதி தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க அறிவுறுத்தியது. அதன் பின்னரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு ஆளுநர் ஏழு பேர் விடுதலை குறித்து முடிவெடுக்காமல் உள்ளதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. கடந்த ஜனவரி 21ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதியரசர்கள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.அப்துல்நசீர் அடங்கிய அமர்வு தமிழ்நாடு ஆளுநர் ஒரு வார காலத்திற்குள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்தது.
அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 163 (1)இன் படி தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவைச் செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே ஆளுநருக்கு இருக்கிறதே தவிர, ஆளுநர் இதில் தனிப்பட்ட முடிவு எதையும் மேற்கொள்ள அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை.
ஆனாலும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஏழு தமிழர் விடுதலை பற்றி குடியரசுத் தலைவரே முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பது அநீதியாகும். மத்திய பாஜக அரசும், தமிழ்நாடு ஆளுநரும், அதிமுக அரசும் இந்தக் கபட நாடகத்தை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
நாட்டின் சட்டத்தையும், நாடாளுமன்ற நெறிமுறைகளையும், ஜனநாயகத்தையும் ஏற்காமல், அலட்சியப்படுத்தி வரும் ஒரு கூட்டத்தின் கையில் அரசு அதிகாரம் சிக்கிக் கொண்டதன் விளைவை நாடு சந்தித்து வருகின்றது. மத்திய பாஜக அரசு - தமிழ்நாடு ஆளுநர் - எடப்பாடி பழனிசாமி அரசு மூவர் கூட்டணியின் சட்டத்திற்கும், நீதிக்கும் எதிரான அராஜகப் போக்கை தமிழ்நாடு மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். எனவே 29 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.