இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 6) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் காடாம்புலியூரைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவர் முந்திரி வணிகம் செய்து வந்தார். அக்டோபர் 28 அன்று வடலூர் சென்ற செல்வமுருகன் வீடு திரும்பாத நிலையில், அவரது மனைவி பிரேமா அலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை. இதையடுத்து, வடலூர் காவல் நிலையத்தில் பிரேமா புகார் கொடுத்தார். ஆனால், நெய்வேலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
அங்கு சென்ற பிரேமாவையும், அவரது குழந்தைகளையும் காவலர்கள் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டனர். அங்கிருந்து பிரேமா வீடு திரும்பும் வழியில், ஆய்வாளர் ஆறுமுகம், காவலர்கள் சுதாகர், அறிவழகன் மற்றும் அடையாளம் தெரிந்து காவலர் ஒருவர் பிரேமாவை வழிமறித்து விசாரித்தனர். மேலும், உனது கணவர் மீது பல வழக்குகள் இருப்பதாக கூறினர்.
மறுநாள் காலையில் பிரேமாவை தொடர்பு கொண்ட காவலர்கள், இந்திரா நகரில் உள்ள ராணி & ராணி என்ற தங்கும் விடுதிக்கு வரச் சொன்னார்கள். குழந்தைகளுடன் சென்ற பிரேமாவிடம் உனது கணவர் செல்வமுருகன் மீது திருட்டு வழக்கு உள்ளது. 10 சவரன் தங்க நகை கொடுத்துவிட்டால், வழக்குப் பதியாமல் விட்டு விடுகிறோம் என்று மிரட்டியுள்ளனர்.
பின்னர், அக்டோபர் 30 அன்று நெய்வேலி நகர காவல் நிலையத்துக்கு பிரேமா சென்றபோது, மனைவி, குழந்தைகளை பார்த்து செல்வமுருகன் கதறி அழுதார். தன்னை அடித்து துன்புறுத்தி விட்டு, திருட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி மிரட்டியதாகக் கூறினார். மேலும், பிரேமாவையும் அடித்த காவலர்கள், இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டினர்.
இதையடுத்து, விருத்தாசலம் கிளைச் சிறையில் செல்வமுருகன் இருந்ததை அறிந்து நவம்பர் 2ஆம் தேதி பிரேமா அங்கு சென்றார். அப்போது செல்வமுருகனை, கைத்தாங்கலாக காவலர்கள் அழைத்து வந்தனர். பின்னர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இறந்து விட்டதாக கூறினார். ஆனால், நெய்வேலி காவல் நிலையத்தில் அவரை அடித்து துன்புறுத்தியதாலேயே உயிரிழந்தார்.
எனவே, செல்வமுருகனின் உடலை வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்ய வேண்டும். அப்போது, அவரது உறவினர் ஒருவர் உடன் இருக்க வேண்டும். மேலும் நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது, கொலை வழக்குப் பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.