தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. திமுக கூட்டணி சார்பாக ஆறு இடங்களில் போட்டியிட்ட மதிமுக நான்கு இடங்களில் வெற்றிவாகை சூடியுள்ளது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மதிமுக வேட்பாளர்கள் சட்டப்பேரவைக்குள் நுழைகின்றனர்.
மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ யாருடன் கூட்டணி வைத்தாலும் அந்த கட்சி தோல்வியை தழுவும் என்று பலர் விமர்சித்த நிலையில், தற்போதைய வெற்றி அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
வைகோ பேட்டி:
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “மதிமுகவின் வெற்றி என்பது, திமுகவால் கிடைத்த வெற்றி” என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "திராவிட இயக்கத்தின் மகத்தான வெற்றியை ஸ்டாலின் தேடி தந்துள்ளார். இந்தி திணிப்பை தடுக்கவும், சமூக நீதியை காக்கவும் மாபெரும் வெற்றியை தேடி தந்துள்ளார்.
கரோனா என்ற கொடிய நோயில் இருந்து காப்பதில் தான் அவர் முழு கவனம் உள்ளது. அதில் வெற்றியும் பெறுவார். தமிழ்நாட்டை பாதுகாப்பார்" என்றார்.