மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் உறுதி மொழி கூறி வைகோ இன்று பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின்போது பேசிய வைகோ,
”23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சபையில் முதல் உரையில் கேள்வி எழுப்ப வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. ஒவ்வொரு ஆண்டும் பருத்தியின் விலை திடீர் ஏற்ற இறக்கங்களைக் காண்பதால் நூற்பாலைகள் பெரிதளவில் பாதிப்படைகின்றன. மற்ற மாநிலங்களிலுள்ள ஆலைகள் போல் அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதால் பெரிதும் பாதிப்படைகின்றன. இதனைச் சரிசெய்ய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது.
சீனாவின் ஆடைகள் வங்கதேசம் வழியாகக் கொண்டுவரப்பட்டு வங்கதேச முத்திரையுடன் முறைகேடாக இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் இந்தியாவிலுள்ள நிறைய ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் எத்தனை லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என்று அமைச்சருக்குத் தெரியுமா? இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று கூற முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, ”வைகோவின் கேள்விகள் நியாயமற்றது” என்று கூறினார். ஆனால் ஸ்மிருதி இரானியின் பதில் தனக்கு திருப்தியளிக்கவில்லை என்று வைகோ கூறினார்.