இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய தொல்லியல் துறையின், பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான குறிப்பு ஆணையை வெளியிட்டு விளம்பரம் செய்துள்ளது. அதில், இந்திய வரலாறு, தொல்லியல்துறை, மானிடவியல் மற்றும் செம்மொழிகளான சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு, ஆதிச்சநல்லூர் அகழ்வு ஆராய்ச்சியை மீண்டும் தொடங்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், மத்திய அரசின் தொல்லியல் துறைப் பணியிடங்களுக்கு சமஸ்கிருதத்தில் பட்டம் பெற வேண்டும் என்று இருப்பதை குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அதிகளவில் தமிழ் பிராமி எழுத்துகளே உள்ளதால், சமஸ்கிருதத்தில் பட்டம் பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி ஐ.நா. மன்றம் வரை சென்று, தமிழ் மொழியின் சிறப்பையும், சங்க இலக்கியங்களையும், திருக்குறளையும் மேற்கோள் காட்டுகின்றார் என்று செய்யப்படும் வெற்று விளம்பரங்களை நம்பி தமிழர்கள் ஏமாற மாட்டார்கள். செம்மொழி தமிழுக்கு உரிய இடத்தை தர மறுக்கும் மத்திய பாஜக அரசு, இந்தி மொழி திணிப்பு மற்றும் சமஸ்கிருதமயமாக்கலை கொள்கையாகவே நடைமுறைப்படுத்தி வருகின்றது.
பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாடு உரிமையை பறித்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்கின்ற கோட்பாட்டை வலிந்து செயல்படுத்துவது, நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது என்பதை மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும். எனவே தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் ” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தொண்டர்கள் அஞ்சலி!