கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. சென்னையில் மொத்தம் 45 கரோனா தடுப்பூசி மையங்களிலும், 19 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மக்களுக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி தட்டுப்பாடு
சென்னையில் நேற்று முன் தினம் (ஜூன்.29) வரை மொத்தம் 25 லட்சத்து 56 ஆயிரத்து 703 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நேற்று முன் தினம் 'தடுப்பூசி முகாம் ரத்து' என சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நேற்றும் பல இடங்களில் தடுப்பூசி இல்லை என பலகை வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நேற்று (ஜூன்.30) காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பியபோது, "சென்னையில் உள்ள ஒன்றிய அரசின் தடுப்பூசி கிடங்கிலிருந்து இரண்டு லட்சம் கரோனா தடுப்பூசிகள் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது" என்றார்.
இணையதளத்திலும் முன்பதிவு
இந்நிலையில், இன்று (ஜூலை.01) சென்னையில் உள்ள அனைத்து கரோனா தடுப்பூசி முகாம்களிலும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் எனவும், முன்பதிவுகளும் செய்து கொள்ளலாம் எனவும் மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.