வருகின்ற மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முகவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துதல், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரகாஷ் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இது குறித்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 21 அன்று மாலை 4 மணியளவில் அம்மா மாளிகை அரங்கில் நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர், ஆணையர் கரோனா பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் போட்டியிடும் வேட்பாளர், முதன்மை முகவர் மற்றும் அவர்களின் எண்ணிக்கை இட முகவர்களுக்கான தடுப்பூசி ஏப்ரல் 24, 26, 28 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
எனவே, மேற்குறிப்பிட்ட தேதிகளில் தங்களது கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர், முதன்மை முகவர், அவர்களின் எண்ணிக்கை இட முகவர்கள் கரோனா தடுப்பூசியினை விருப்பத்தின்பேரில் செலுத்திக்கொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையில் சமூக நலனில் தங்களின் பங்களிப்பை நல்குமாறும், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்திலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையத்திலோ செய்துகொண்டு உரிய சான்றிதழினை சமர்ப்பித்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் மத்திய சென்னை தொகுதிகளின் வாக்குப்பெட்டிகள் லயோலா கல்லூரியிலும், வடசென்னை தொகுதியிகளின் வாக்குப் பெட்டிகள் ராணிமேரி கல்லூரியிலும், தென்சென்னை தொகுதிகளின் வாக்குப் பெட்டிகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.