Vaccination Certificate Number: தமிழ்நாட்டில் தற்போது 12 ஆயிரத்தைக் கடந்து கரோனா தொற்று அதிகரித்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இரவு நேர ஊரடங்கு, வார இறுதியில் முழு நேர ஊரடங்கு, வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் அனைத்து ஆலயங்களும் மூடல் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தெற்கு ரயில்வே சார்பாக கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயில்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ்களின் கடைசி நான்கு இலக்க எண்கள் சீசன் பயணச்சீட்டு அச்சிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று (ஜனவரி 10) முதல் அது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்நிலையில் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருமுறை தடுப்பூசி சான்றிதழ்களைக் காட்டி பயணிகள் தங்களது பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டனர். பயணச்சீட்டு, சீசன் டிக்கெட்டுகளில் தடுப்பூசியின் கடைசி நான்கு இலக்க எண்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுவருகிறது.
மேலும் பயணியிடம் கரோனா தடுப்பு ஊசி சான்றிதழ்கள் வைத்துள்ளார்களா என ரயில்வே ஊழியர்கள் பரிசோதனை செய்தனர். மேலும் UTS செயலியின் மூலம் ரயில்களில் முன்பதிவு செய்யும் வசதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா!