சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகின்றது.
அதனடிப்படையில், மாநகராட்சிக்குள்பட்ட 200 வார்டுகளில் இன்று 400 கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகின்றது.
400 சிறப்பு முகாம்கள்
அதனடிப்படையில் சென்னை மாநகராட்சியில் நேற்றுவரை (ஆகஸ்ட் 25) மொத்தம் 37 லட்சத்து நான்காயிரத்து 807 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதைச் செயல்படுத்தும் வகையில், இன்று மாநகராட்சியின் சார்பில் ஒரு வார்டிற்கு இரண்டு தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என மொத்தம் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்களை மாநகராட்சி நடத்திவருகின்றது.
இந்நிலையில், இன்று 400 சிறப்பு முகாம்கள் அந்தந்த வார்டிலுள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள், வார்டு அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், பள்ளிகள் போன்ற ஏதேனும் ஒரு இடத்தில் நடத்தப்படுகின்றன.
மாலை 5 மணிவரை
இன்று காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். மக்கள் வரிசையில் நின்று ஆதார் எண்ணைப் பதிவுசெய்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.
கிட்டத்தட்ட ஒரு முகாமிற்கு 500 தடுப்பூசி வீதம் செலுத்தப்பட உள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சிறப்பு முகாம் மாலை 5 மணிவரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 'அனைவருக்கும் இது கட்டாயம் - பம்பர் டூ பம்பர் காப்பீடு'