மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்காக துறையின் அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இதில் மருத்துவத் துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, "செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் பல் மருத்துவ வாகனம் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சேவையை மேற்கொள்ளும்.
அரசுப் பள்ளிகளுக்கும் இந்த வாகனம் அனுப்பப்பட்டு மாணவர்களுக்குப் பல் பரிசோதனை, சிகிச்சை மேற்கொள்ளப்படும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இதுபோன்ற கூடுதல் வாகனங்கள் வாங்கப்படும்.
தற்போது 53 லட்சம் தவணை கோவிட் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். அசைவப்பிரியர்கள், மதுப்பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை முகாம்களில் பங்கேற்காமல் இருக்கிறார்கள்.
இவற்றை எடுத்துக்கொண்டால் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற வதந்திகளை நம்புகிறார்கள், இது தவறு. எனினும் அவர்களையும் தடுப்பூசி போடச் செய்யும்விதமாக இவ்வாரம் சனிக்கிழமை முகாம் நடத்துகிறோம்.
50 ஆயிரம் முகாம்கள் சனிக்கிழமையன்று நடத்தப்படும். சென்னை மாநகராட்சியில் ஆயிரத்து 600 முகாம்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 500 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'திருமாவளவன் ஒரு சமூக விரோதி!'