இது தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஞானசேகரன் தொடர்ந்துள்ள வழக்கில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் ஆகியோர் செல்லும் இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டமும் தடுக்கப்படுவதாக மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம் ஆகியவற்றில் மக்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக்கடை, திரையரங்கம், மால் ஆகியவற்றில் மக்கள் கூடி வருவதாகவும், அதேபோல பரப்புரை கூட்டங்களிலும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஒன்று கூடுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் போக்குவரத்தை தடுத்து நிறுத்தாமல் பரப்புரைகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி தலைவர்களின் பரப்புரையின்போது எந்தவித தடையும் செய்யக்கூடாது என்றும், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரும்போதுதான் உரிய போக்குவரத்து தடைகளை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக காவல்துறை டிஜிபி மற்றும் ஆணையர்களுக்கு தேர்தல் ஆணையம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் தடை; ஆ.ராசா கோரிக்கை நிராகரிப்பு!