மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு எதிராக, அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகிய இரண்டு சங்கங்களும் இணைந்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டன. இதில் பல்வேறு பொதுத் துறை வங்கிகளைச் சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் வங்கிகளில் வசூலிக்கப்படும் சேவை கட்டணம் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம், "மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு முடிவுக்கு எதிராக நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வு முறைகேடு எதிரொலி: மாணவர்களின் கைரேகையை சோதனை செய்ய முடிவு!
10 பொதுத் துறை வங்கிகள், நான்காக இணைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால் சிறப்பாகச் செயலாற்றிவந்த ஆறு வங்கிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேவையில்லாத நேரத்தில், இந்த முடிவை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருக்கும் நேரத்தில், வாராக்கடன்களை முறையாக வசூலித்து வங்கிகள் மூலம் அதிக அளவில் கடன் கொடுத்து பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும். வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால், வங்கிகளின் கவனம் திசை திரும்பும். இந்த நடவடிக்கையால் அரசுக்கோ வங்கிகளுக்கோ வாடிக்கையாளர்களுக்கோ லாபமில்லை.
வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இம்மாதம் 22ஆம் தேதி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பாக, நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். இதில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வர்" என்றார்.