மாணவர்கள், இளைஞர்கள் என ஒட்டுமொத்த சமூகத்தையும் குடும்பத்தையும் மது சீரழித்துவருகிறது. எனவே அந்த மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு ஊராட்சி நிர்வாகத்திற்கு இருக்கிறது.
ஆனால், ஒரு ஊராட்சி நிர்வாகத்தால் டாஸ்மாக்கை மூட முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கலாம். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 111இன்படி, ஊராட்சி தன் மக்களின் பாதுகாப்பிற்காகவும் சுகாதாரத்திற்காகவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 159இன்படி ஒரு நிறுவனம் ஊராட்சியில் நிறுவுவதற்கு முன்பு அந்த ஊராட்சியின் உரிமத்தை பெறுவது அவசியம். அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மனித உயிர் மற்றும் உடல் நலத்திற்கு ஆபத்தானதாக இருந்தால் அந்த நிறுவனத்திற்கு உரிமம் வழங்க மறுப்பதற்கு ஊராட்சிக்கு உரிமை இருக்கிறது (சட்டப்பிரிவு 159(4)).
மாதந்தோறும் நடக்கும் ஊராட்சி மன்ற கூட்டத்திலும் கிராம சபை கூட்டத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எனவே நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு விளைவிக்கக்கூடிய மதுவை விற்கும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடி மக்களை பாதுகாக்கும் கடமையை ஊராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும்.