தேனி மருத்துவக் கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் உதித் சூர்யா என்ற மாணவர் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தையும் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருந்துவருமான வெங்கடேசன், அவரது மனைவி உள்ளிட்ட மூன்று பேரும் தலைமறைவாகினர். பின்னர் திருப்பதியில் பதுங்கியிருந்த அவர்களை கைது செய்த காவல் துறையினர், சிபிசிஐடி காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த சிபிசிஐடி காவல் துறையிடம், தனது மகன் உதித் சூர்யாவிற்காக ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவி புரிந்ததை மருத்துவர் வெங்கடேசன் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதன் காரணமாக நீட்தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு உடந்தையாக செயல்பட்டதற்காக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வந்த மருத்துவர் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.