சென்னை: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (ஜூலை 1) தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுப. உதயகுமார், "கடந்த மூன்றாண்டுகளாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய சுமார் 400 பொதுமக்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
முதலமைச்சருக்கு வாழ்த்து
கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதற்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
கூடங்குளத்தில் ஐந்தாவது, ஆறாவது அணு உலைகள் கட்டும் பணிகள் நேற்று (ஜூன் 30) தொடங்கிய நிலையில் அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் அணுக்கழிவு மையம் அமைப்பதையும் தடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கைவைத்துள்ளோம்.
அணு உலை பூங்காவை எதிர்க்கவும்
மக்கள் மனத்தை புரிந்துகொண்டு செயல்படும் அரசாக தற்போதைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது கூடங்குளத்தில் உள்ள அணு உலைகளில் உற்பத்திப் பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அணு உலை பூங்கா கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமாறு முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இதனை, முதலமைச்சர் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார். மேலும், அணு உலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உள்பட 125 வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கோரிக்கைவைத்தோம்" என்றார்.
இதையும் படிங்க: ’கூடுதல் அணு உலை அமைக்க அனுமதிக்கக் கூடாது’ - முகிலன் எதிர்ப்பு