ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில், இன்று (அக்.4) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் நாளை விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செவ்வந்திப்பூ கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மல்லிகை பூ கிலோ ரூ.850-க்கும், சம்பங்கி கிலோ ரூ.240-க்கும், செவ்வந்திப் பூ கிலோ ரூ.380-க்கும் விற்பனையானது.
இதேபோல் கோழிக்கொண்டை கிலோ ரூ.105-க்கும் செண்டுமல்லி கிலோ ரூ.80-க்கும், ஒரு கட்டு ரோஸ் ரூ.150-க்கும் விற்பனையானது. பூஜைக்கு தேவையான மலர்களை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். மேலும் இன்று விற்பனைக்கு வந்த 2 டன் செண்டுமல்லிப்பூக்கள் கிலோ ரூ.80-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கூடுதல் தலைமை ஆசிரியர் கைது