சென்னை: திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரக்கூடிய ஒன்பது பள்ளி மாணவர்கள் இன்று (பிப்ரவரி 26) பள்ளியைப் புறக்கணித்துவிட்டு, மெரினா கடற்கரைக்கு வந்தனர். பின்னர் நேதாஜி சிலை பின்புறத்தில் உள்ள கடலில் ஒன்பது மாணவர்களும் குளித்துவந்தனர்.
குளித்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் திடீரென கடல் அலையில் சிக்கி காணாமல்போயினர். அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் இது குறித்து மெரினா காவல் துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் மீட்புப் படையினர், அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களைத் தீவிரமாகத் தேடினர்.
சில மணி நேரத்திற்குப் பிறகு இரு மாணவர்களின் உடலும் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. காவல் துறையினர் மாணவர்களின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருநின்றவூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஹாரிஷ் (13), ஆகாஷ் (15) என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடல் அலையில் சிக்கி தொடர்ந்து மாணவர்கள் பலியாகி வருவதால், அதைத் தடுக்க மீட்புப்படை, ட்ரோன் ஆகியவை மூலமாகக் கண்காணிப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒருதலைக்காதல்: இளம்பெண்ணின் தந்தை கொலை - மக்கள் சாலை மறியல்