சென்னை எஸ்.எஸ். புரத்தைச் சேர்ந்தவர் பரத். இவர் மீது இரண்டு கொலை வழக்குகளும், திடீர் நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மீது ஐந்து கொலை வழக்குகளும் நிலுவையில் இருந்துவருகின்றன. இது தவிர கொலை முயற்சி, ஆள்கடத்தல், திருட்டு, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் இருவர் மீதும் உள்ளன. இருவரும் காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்க தலைமறைவாக இருந்து வந்துள்ளனர்.
இதையடுத்து இருவரையும் பிடிக்க தலைமைச் செயலக காலனி (G5) காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, நேற்று முன்தினம் சிக்கிய பரத்தை காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதேபோன்று நேற்று மற்றொரு குற்றவாளியான சக்திவேலை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர் அவரையும் சிறையில் அடைத்தனர்.