சென்னை: வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் (19), நவின் (19), அருண்குமார் (19) ஆகிய மூன்று பேரும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகின்றனர். இவர்கள் ஒரே பைக்கில் நேற்று (நவம்பர் 21) வில்லிவாக்கம் பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வில்லிவாக்கத்திலிருந்து பெசன்ட்நகர் செல்லும் தடம் எண் 47 என்ற பேருந்தும், பைக்கும் லேசாக மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மூன்று பேரும் பேருந்து ஓட்டுநர் மணிவண்ணன் (34) என்பவரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் பேருந்து முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தி, பின்னர் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து மூன்று பேரும் தப்பிச் சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் செல்லாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாகப் பேருந்து ஓட்டுநர் மணிவண்ணன் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய கல்லூரி மாணவர்கள் சாமுவேல், அருண்குமார் ஆகிய இருவரையும் கைதுசெய்து, விசாரித்துவருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஒடிய நவினை வில்லிவாக்கம் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:வெள்ள சேதம்: ஆய்வைத் தொடங்கிய மத்திய குழு