துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு துபாய் சிறப்பு விமானம் ஒன்று நேற்று இரவு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை அலுவலர்கள் சோதனையிட்டனா். அப்போது, கேரளா மாநிலத்தைச் சோ்ந்த முகமது சமீா்(29), தமிழ்நாட்டை சோ்ந்த ராமு கண்ணன்(32) ஆகிய இருவரின் பாஸ்போா்ட்களை ஆய்வுசெய்தனா்.
அப்போது அவா்கள் இருவரும் துபாய்க்கு வேலைக்கு என்று சென்றுவிட்டு, அங்கிருந்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று சில காலம் தங்கியிருந்துவிட்டு மீண்டும் துபாய் வழியாக இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த இரு பயணிகளையும் வெளியே அனுப்பாமல், குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் தனிமையில் வைத்து இரவு முழுவதும் தீவிர விசாரணை நடத்தினா்.
குடியுரிமை அலுவலர்களுடன், மத்திய உளவு பிரிவு அலுவலர்கள், கியூ பிரிவு அலுவலர்களும் விசாரித்தனா். அப்போது, ஏமன் நாட்டில் அதிகளவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாத இயக்கத்திடம் தொடா்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தினா். நாங்கள் வேலை செய்யும் நிறுவனம், பணி நிமித்தமாக ஏமனுக்கு எங்களை அனுப்பியது. அது தடை செய்யப்பட்ட நாடு என்று எங்களுக்கு தெரியாது. வேறு எந்தவிதமான இயக்கத்துடனும் எங்களுக்கு தொடா்பு கிடையாது என்று இருவரும் கூறினா்.
ஆனாலும் சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்கள், இருவரையும் மேலும் விசாரணை நடத்த முடிவு செய்தனா். அதன்படி பயணிகள் இருவரையும் இன்று காலை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் இருவரிடமும் தொடா்ந்து விசாரணை நடத்துகின்றனா்.