சென்னை: வண்ணாரப்பேட்டையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் தீவிரமாக வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், வண்ணாரப்பேட்டை கல்லறைச்சாலை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர், அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது, நைட்ரோவிட் என்னும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் அதிகளவில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரித்தபோது, நைட்ரோவிட் மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவது தெரியவந்தது.
போதை மாத்திரைகள் மறிமுதல்
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் என்ற சந்துரு, பிரதீப்ராஜ் என்பது தெரியவந்தது. மேலும், இருவரிடமும் இருந்து 200 நைட்ரோவிட் மாத்திரைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது ஏற்கனவே திருட்டு உள்பட இரண்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன் - நாக்பூரில் மீட்பு