சென்னை: உக்ரைனில் போர் நடப்பதால் கடந்த 2 வாரங்களாக இந்திய அரசு சிறப்பு விமானங்கள் இயக்கி உக்ரைன் அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை டெல்லி, மும்பை நகரங்களுக்கு அழைத்துவந்தன. தமிழ்நாட்டிற்கு 9ஆவது நாளாக 9 விமானங்களில் சென்னை, திருச்சி, கோவை உட்பட பல பகுதிகளைச் சேர்ந்த 169 மாணவ-மாணவிகள் டெல்லியிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.
மேலும், தமிழ்நாடு அரசின் சிறப்புக்குழு முயற்சியில் டெல்லியில் 3ஆவது நாளாகத் தனி விமானம் மூலம் மாணவர்கள் திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த மாணவர்களைத் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
மாணவர்களைக் கண்டதும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கட்டிய அணைத்து கண்ணீர் மல்க வரவேற்றனர். பின்னர், சொந்த ஊருக்கு அரசு செலவில் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நன்றி மறவாமை
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியைச் சேர்ந்த அருளானந்தன் உக்ரைனிலிருந்து வந்தார். அவரை அவரது தாய் தீபாகுமாரி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். பின்னர் மாணவர் அருளானந்தன், தாய் தீபாகுமாரி ஆகியோர் உக்ரைனில் உணவின்றித்தவிக்கும் மாணவர்களுக்கு உதவிட ரூ.25,000 நிதியை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் வழங்கினார்.
இதுகுறித்து மாணவனின் தாய் தீபாகுமாரி கூறுகையில், 'உக்ரைனில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு உதவிட வேண்டும் என்பதற்காக நிதியை வழங்கினோம். என் மகன் கஷ்டப்பட்டபோது, உக்ரைனில் ஒரு வேளை உணவாக ரொட்டி தந்தனர். அந்த மக்களுக்கு நன்றி விசுவாசமாக இருக்க வேண்டும்' என்று உருக்கமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சிறைக்குள்ளும் ரூ.100 கோடி ஊழல்; மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் செய்க' - உயர் நீதிமன்றம்