ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மூன்றாவது அணி என்பது கனவு. மூன்றாவது அணி பற்றி கற்பனை, கனவு காணலாம். ஆனால் அது ஒருபோதும் நிஜமாகாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்து மக்கள் வாக்களித்துள்ளனர். இந்தியாவில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிதான் அமையும். அப்படியிருக்கும் பட்சத்தில் மூன்றாவது அணி அமையுமா என்பதுதான் கேள்வி.
திமுக ஏதாவது ஒரு இடைவெளியில் வாய்ப்பு கிடைக்குமா என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். வெல்ல முடியாது என்பது ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது. எனவே வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தாவது பாஜக கூட்டணியில் இணைந்து விடலாம் என்று நினைக்கிறார். உறுதியாக அதற்கு வாய்ப்பு இல்லை என்பதுதான் எனது கருத்து.
இந்த அத்தனை கேள்விக்கும் விடையாக வருகிற 23ஆம் தேதி மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு தருவார்கள். மத ரீதியான கருத்துக்களை யார் பேசும்போதும் யோசித்து பேச வேண்டும். அப்படி இருக்கும்போது ஒரு மதத்தை புண்படுத்தும் விதமாக பேசுவது என்பது கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு மதமாக இருந்தாலும் அடுத்தவர் மனதை புண்படும்படி பேசி கருத்தைத் தெரிவிப்பதை யாரும் வரவேற்கமாட்டார்கள். இன்று நாடு துண்டாடப்படுவது என்பது மதத்தையும், ஜாதியும் வைத்துதான். அதற்கு நடிகர் கமல்ஹாசன் வழிவகை செய்யக்கூடாது” என்றார்.