சென்னை: பன்னாட்டு விமான நிலைய சரக்ககத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் சரக்கு விமானத்தில் கடல் நண்டுகள் இருப்பதாகக் கூறப்பட்ட 15 பார்சல்களை விமான சுங்க அலுவலர்கள் சோதனை செய்தபோது அவற்றில் உயிருடன் நட்சத்திர ஆமைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டாயிரத்து 247 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்செய்யப்பட்டன. பின்னர் அவை தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
![நட்சத்திர ஆமைகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-turtleabductioncasetransferredtocbl-script-photo-script-7208368_09092021002722_0909f_1631127442_578.jpg)
இது தொடர்பாக சுங்கத் துறை அலுவலர்களும், மத்திய வனக்குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்களும் விசாரணை செய்தனர். நட்சத்திர ஆமைகள் கடத்தல் தொடர்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த வினோத் (25) என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டார்.
விசாரணையில் இந்தக் கடத்தல் சம்பவத்தில் முக்கியப் பிரமுகர்களுக்கும், வெளிநாடுகளில் இருப்போருக்கும் தொடர்புள்ளதாகத் தெரியவந்தது. இதுபற்றி முழுமையாக விசாரணை நடத்தி கடத்தல் கும்பலைக் கூண்டோடு பிடிக்க முடிவுசெய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சென்னை விமான நிலையத்தில் நட்சத்திர ஆமைகள் பிடிப்பட்ட வழக்கை வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் விசாரிக்க மத்திய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற சுங்கத் துறை அலுவலர்கள், மத்திய வனக்குற்றப் புலனாய்வுத் துறையினர் முடிவு செய்தனர்.
![நட்சத்திர ஆமைகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-turtleabductioncasetransferredtocbl-script-photo-script-7208368_09092021002722_0909f_1631127442_1005.jpg)
இதையடுத்து சுங்கத் துறையினர் நட்சத்திர ஆமைகள் கடத்தல் வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைத்தனர். நட்சத்திர ஆமைகள் கடத்தல் வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு பரிந்துரை செய்வது இந்தியாவிலேயே இதுவே முதல் முறை எனச் சுங்கத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உலக அழகு தினம் - மனிதத்தின் வித்து!