மதுரை ஆதீனத்தின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆதீன மடத்தில் பவள விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆதீனம் அதிமுகவுடன் டிடிவி தினகரனை இணைப்பதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ஆதீனத்தின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இணைய வாய்ப்பிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சில வாரங்களுக்கு முன்பு மதுரை ஆதீனம் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அந்தத் தகவல் அடிப்படை ஆதாரமற்றது. அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை என்று மிக நாகரிகமாக நான் மறுப்பு தெரிவித்திருந்தேன்.
இந்த பதில்களில் இருந்தே ஆதீனம் அவர்கள் உண்மை நிலையைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல் இன்று மீண்டும் அதே கருத்துக்களை சொல்லியிருப்பதைப் பார்த்தால், தனது பழைய பணியான தமிழரசு பத்திரிகையின் பி.ஆர்.ஓ. வேலையை இன்னமும் மறக்கவில்லை என தோன்றுகிறது.
எங்களுக்கே தெரியாமல் இணைப்புப் பேச்சு நடப்பதாக அவர் தொடர்ந்து பொய் சொல்வதைப் பார்த்தால், எங்கள் துரோகிகளுக்கோ இல்லை எதிரிகளுக்கோ ஏஜெண்டாக இருக்கிறார் எனத் தோன்றுகிறது. அவர் சொல்வதுபோல இணைப்புப் பேச்சு நடப்பது உண்மையானால், அதைச் செய்வது யார் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
புரட்சித் தலைவி அம்மா மறைவுக்குப் பிறகு கட்சியையும் ஆட்சியையும் பாஜகாவிடம் அடகுவைத்து, அம்மாவையே பழித்துப் பேசிய கட்சிகளுடன் தங்கள் சுயலாபத்துக்காக கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வத்தை ஆதீனத்தால் கண்டிக்க முடியவில்லை.
இதனால் அவர் வேறு யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பி வருகிறார். இது தொடர்ந்தால் மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காப்பாற்றுவதற்காவது, அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.