இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவர் உருவாக்கிய ஆட்சியை எத்தனையோ இன்னல்களுக்கு இடையில் இரும்புப் பெண்மணியாக நின்று காப்பாற்றி காட்டியவர் சசிகலா. எனினும் சிலரின் சுயநலத்தால், தவறான நடவடிக்கைகளால் எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா காத்து நின்ற இயக்கம், திசை மாறி, மாலுமி இல்லாத கப்பலாக, தமது தனித்தன்மையை இழந்து தத்தளித்து நிற்கிறது.
ஆட்சி அதிகாரம் இருப்பதால் மட்டுமே தங்களோடு ஒட்டிக்கொண்டிருப்பவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு தானே பெரிய ஆளுமை எனத் தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்கிறார்கள். எதிரிகளுக்கு எப்போதும் அச்சம் தரும் அசலான வீரவாளுக்கு அட்டைக்கத்தி ஒருபோதும் ஈடாக முடியாது என்பது தெரியாமல், அர்த்தராத்திரியில் குடை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதா இல்லாத 2021 தேர்தல் களத்தில் எப்படியாவது தங்களின் ஈளக்கனவை நனவாக்கிவிட வேண்டும் என்று தீயசக்தி கூட்டம் இன்றைக்கு துடித்துக்கொண்டிருக்கிறது. அதனை முறியடிப்பதற்கான ஆற்றலும், எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருக்கிற தொண்டர் படையும், எழுச்சி மிகுந்த இளைஞர் பட்டாளமும் நம்மிடம்தான் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு இந்த மண்ணில் திமுக என்னும் தீயசக்தி கூட்டம் தலையெடுப்பதைத் தடுத்தே தீரவேண்டிய பெரும் பொறுப்பையும், கடமையையும் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களான நம்முடைய கரங்களில் காலம் வழங்கியிருக்கிறது.
10 ஆண்டுகளாக பதவியில் இல்லாமல் காய்ந்துபோய் மக்களின் மீது பாய்வதற்குத் தயாராகிவருகிறார்கள், அப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் பாருக்கு வார் எதையெல்லாம் அபகரிப்பார்கள், என்னென்ன அட்டூழியங்களை அரங்கேற்றுவார்கள் சாதாரண மக்களின் நிம்மதி எப்படியெல்லாம் குலைந்துபோகும் என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது.
எனவே, எதைப்பற்றியும் கவலைப்படாமல், 'வெற்றி நமதே என்று முழங்கி ஒவ்வொருவரும் களமிறங்குவோம். ஜெயலலிதா கட்டிக்காத்த பெருமைகளை மீட்டெடுக்க, தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதாவின் கம்பீரமான ஆட்சியை, தமிழ்நாடு மக்களின் பேராதரவுடன், நாம்தான் அமைக்கப் போகிறோம் அதற்காக ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5ஆம் தேதி இதயப்பூர்வமாக அஞ்சலி செலுத்தி, நாம் ஒவ்வொருவரும் மனதார உறுதியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...தடையை மீறி போராட்டம்: அன்புமணி, ஜிகே மணி உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு