புதிய தேசிய கல்விக் கொள்கையை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வரையறுத்துள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை, கல்வித் துறையில் மாநில உரிமைகளை முற்றிலும் பறிக்கக்கூடிய வண்ணம் அமைந்துள்ளது. இதனால் இக்கொள்கைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா, புதிய கல்விக் கொள்கையால் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் சேர்ந்தே பாதிக்கப்படுவர் என கூறியுள்ளார்.
அதேபோல், புதிய தேசியக் கல்விக் கொள்கை நடைமுறைக்கு வராமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் திமுக மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தி மொழிக்கு திமுக எதிரி அல்ல என கூறியுள்ள திருச்சி சிவா, இந்தியை நாங்கள் எதிரியாகக் கருதினால் ஓராண்டுக்கு நான்கு லட்சம் பேர் தேர்ச்சி பெறக்கூடிய ’இந்தி பிரசார சபா’ தமிழ்நாட்டில் இருக்காது எனவும் எச்சரித்துள்ளார்.