தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகித்துவருகிறது. அதிமுக கூட்டணி 80-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் மநீம ஒரு தொகுதியிலும் முன்னிலை வகித்துள்ளது.
பெரும்பான்மையை மிஞ்சிய திமுக:
234 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் திமுகவின் முன்னிலை நிலவரம் அவர்களது வெற்றி வாய்ப்பை பிரதிபலிக்கின்றது. இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
வாழ்த்து மழையில் ஸ்டாலின்:
மேலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்களான சரத்பவார், தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நல்லாட்சி நடத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஸ்டாலினின் வெற்றி
கிட்டத்தட்ட திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகிவரும் நிலையில் தொண்டர்கள் அதைக் கொண்டாடி மகிழ ஆசைப்படுகின்றனர். ஆனால் திமுக தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ஸ்டாலினின் வேண்டுகோளுக்கிணங்க தேர்தல் கொண்டாட்டத்தை அறவே தவிர்த்துவருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் தொண்டர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ட்விட்டரில் மு.க. ஸ்டாலின் என்னும் நான் எனும் ஹேஷ்டேக் (#முகஸ்டாலின்எனும்நான் ) தமிழ்நாடு அளவில் ட்ரெண்டாகிவருகிறது.