சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய 2207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர் நிலை 1, முதுகலை கணினி ஆசிரியர்கள் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை செப்டம்பர் 9ஆம் தேதிமுதல் நவம்பர் 14ஆம் தேதிவரை ஆன்லைன் மூலம் பெற்றது.
இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு எழுத இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி ஆசிரியர்கள் நிலை 1 ஆகிய காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தேர்வுசெய்வதற்கான எழுத்துத் தேர்வுகள் ஜனவரி 29ஆம் தேதிமுதல் பிப்ரவரி 6ஆம் தேதிவரை நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பெருந்தொற்றுச் சூழ்நிலை நிர்வாக காரணங்களினால் பிப்ரவரி 12ஆம் தேதிமுதல் 20ஆம் தேதிவரை காலை மாலை இருவேளைகளிலும் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விரிவான அட்டவணை 15 நாள்களுக்கு முன்பு வெளியிடப்படும்.
![முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி மாற்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-09-pg-trb-exam-postpond-script-photo-7204807_12012022192938_1201f_1641995978_67.jpg)
இந்தத் தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்களின் யூசர் ஐடி, பாஸ்வேர்ட் பதிவுசெய்து பதிவிறக்கம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த அட்டவணை நிர்வாக காரணங்களினால், பெருந்தொற்று சூழ்நிலையைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'பொங்கல் பரிசில் பல்லி; கேள்வி கேட்டால் மரணம்... திமுக அரசின் ஜனநாயகப் படுகொலை!'