தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 18 ஆம் நடைபெறுகிறது. மேலும் அதே நாளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது. அன்றைய தினம், பொது விடுமுறையாகும். மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தேர்தல் தேதியையொட்டி விடுமுறை வருகிறது.
இதனையடுத்து சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வசிப்போருக்குத் தங்களின் சொந்த ஊர்களில் தான் ஓட்டுகள் உள்ளன.
எனவே பலரும் தற்போதே முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர். இதனால், தமிழ்நாடு போக்குவரத்து துறை வழக்கத்தை விட கூடுதல் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை அலுவலர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் ஏப்ரல் 17-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 19-ஆம் தேதி புனித வெள்ளி என்பதால், அரசு விடுமுறையாகும். இந்த 3 நாட்களுடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால், தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை.
எனவே, இந்த விடுமுறையை பயன்படுத்தி, சென்னையில் வசிக்கும் வெளியூர்காரர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று தேர்தலில் ஓட்டு போடுவதற்கு வசதியாக சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் வழக்கமாக செல்லும் பஸ்களுடன், சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
இந்த சிறப்பு பஸ்கள் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பாககோயம்பேட்டில்இருந்து இயக்கப்படும். அதே போல் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்பவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் வெல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்பட்டது போல் இயக்கப்படுமா என்ற கேள்விக்கு, காவல்துறையினர் தேர்தல் பணியில் இருப்பதால் அவர்களால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த இயலாது. ஆகையால் சிறப்பு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என பதிலளித்தார்.