தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான பூஜைகள் ஜனவரி 27ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகின்றன. இதில் உச்சரிக்கும் சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழிபெயர்த்து உச்சரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.
மந்திரங்களை தமிழில் சொல்லும்போதுதான் அதன் அர்த்தங்களைப் பக்தர்கள் அறிந்துகொள்ள முடியும் என்பதால், குடமுழுக்கு விழாவில் உச்சரிக்கும் மந்திரங்களை தமிழில் மொழிபெயர்த்து தெரிவிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி, திருவள்ளூரைச் சேர்ந்த மணிகாணந்தா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குடமுழுக்கு விழாவின்போது தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து, சமஸ்கிருத மந்திரங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளதா? எனவும் எந்த அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டது எனவும் மனுதாரரிடம் கேள்வியெழுப்பிய நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார்.
மேலும், மனுதாரர் இந்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறியதால், இந்த வழக்கை பொதுநல வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் பட்டியலிட தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்தார்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு: சிறப்பு பாடலை வெளியிட்ட இயக்குநர்!