'அம்மா'... தமிழ் மரபில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு சொல். தாயுமானவர்கள் நிறைந்த இம்மண்ணில் அச்சொல் வெறுமனே பெண்ணை மட்டுமே குறிக்கும் என்று கடந்துவிட முடியாது. எவ்வித எதிர்பார்ப்புமற்ற அன்பைப் பொழிபவர் அம்மா என்ற சொல்லில் அடக்கிவிடலாம். அப்படி ஒருவர்தான் திருநங்கை நூரி சலீம்.
குடும்பம், நண்பர்கள் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட திருநங்கை நூரி சலீமுக்கு தற்போது வயது 69. உலக நாடுகளுக்கு ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் பற்றி தெரியவந்த 1987இல், இந்தியாவில் அதனால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் என அறியப்பட்டவர். தற்போது ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ள 45 ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரணாகவும், அன்னையாகவும் இருக்கிறார் நூரி.
திருநங்கை நூரி 2003ஆம் ஆண்டு முதல் நிர்வகித்துவரும் SIP நினைவு இல்லம் மூலம், நோய் பாதித்த பல குழந்தைகள் பள்ளி, கல்லூரிகள் எனப் படித்து, தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றுவருகின்றனர். மேலும், இங்குள்ளவர்கள் தவிர, 100-க்கும் அதிகமான வெளிக் குழந்தைகளுக்கும் கல்வி உள்ளிட்டவற்றிற்கு உதவிவருகிறார் நூரி சலீம்.
SIP நினைவு இல்லத்தில் உள்ள குழந்தைகள் வார்த்தைக்கு வார்த்தை கூறும் ஒரு சொல் நூரி ஆயா என்பதைத்தான். அந்தளவிற்கு நூரி மீது அன்பைப் பொழிகின்றனர் இவர்கள். மேலும், சொந்தக் கட்டடத்தில் இந்த இல்லம் அமைய போராடிவரும் நூரி ஆயாவுக்கு அனைவரும் உதவும்படியும் கோருகின்றனர் இச்சிறுவர்கள்.
திருநங்கை நூரி சலீமின் நிகரில்லா இச்சேவைகளைப் பாராட்டி 2013இல் தமிழ்நாடு அரசு வாழ்நாள் சாதனை விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. மேலும், முன்னாள் ஆளுநர் ரோசய்யா ’சிறந்த அன்னை’ என்ற விருதை தனக்கு வழங்கியதுதான் தனக்குரிய உண்மையான அங்கீகாரம் என்று பூரிப்படைகிறார் அன்னை நூரி சலீம்.
இதையும் படிங்க: தியாக தீபம் அன்னையைப் போற்றுவோம்! அன்னையர் தின சிறப்புத் தொகுப்பு
தாயின் நினைவுகளை பகிர்ந்த சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம்! #EXCLUSIVE