சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயின்றுவந்த மாணவன் சங்கர். இக்கல்லூரியின் விடுதியில் தங்கிப் பயின்ற இவர் திருவள்ளூர் புத்தேரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக சக மாணவர்களுடன் கல்லூரியில் பின்புறம் அமைந்துள்ள சுவரின் மீது ஏறி குதித்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் செல்ல முயற்சி செய்துள்ளார்.
அப்போது சங்கர் தண்டவாளத்தைக் கடக்க முற்படும்போது சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லக்கூடிய ரயில் மோதியதில் பத்தடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். பின்னர் இது குறித்து 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் சங்கர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் சங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர. மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.