சென்னை: அண்ணா சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே அண்ணாசாலை - டேம்ஸ் சாலை சந்திப்பு ஒருவழிப்பாதையாகயும், அண்ணாசாலை - திரு.வி.க சந்திப்பு ஒருவழிப்பாதையாகவும் மாற்றப்பட்டது. இந்நிலையில் மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு அருகே போக்குவரத்து மாற்றங்களை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் செய்துள்ளனர்.
அதன்படி ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலையைச் சென்றடையவும், டவர் பிளாக் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை வழியாக அண்ணாசாலையை சென்றடையவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்களும், பட்டுலாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்களும் ஸ்மித் சாலைக்கு சற்று முன்பு உள்ள பாரத் பெட்ரோலியம் எதிரே யுடர்ன் எடுத்து ஸ்பென்சர் சந்திப்பை வந்தடையவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஸ்மித் சாலை சிக்னல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் அமைந்துள்ள தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க திட்டமிடப்பட்டது.
அந்த வகையில் பழைய மகாபலிபுரம் சாலை இந்திரா நகர் சந்திப்பு வழியாக அடையாறு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இன்று முதல் ஓ.எம்.ஆர் சர்வீஸ் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி சர்தார் பட்டேல் சாலையை அடைந்து, காந்தி மண்டபம் மேம்பாலத்தின் கீழ் யுடர்ன் எடுத்து சர்தார் பட்டேல் சாலை வழியாக, சி.பி.டி சந்திப்பை அடைந்து வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பழைய மகாபலிபுரம் சாலையில் இருந்து அடையாறு நோக்கிச் செல்லும் வாகனங்கள், இந்திரா நகர் சிக்னலில் வலதுபுறம் திரும்பி, இந்திரா நகர் 2ஆவது அவென்யூ, இந்திரா நகர் முதல் அவென்யூ சந்திப்பு வழியாக எல்.பி சாலையை அடைய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முயற்சியாக இன்று முதல் 10 நாட்களுக்கு தொடரும் எனவும், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பொதுமக்களின் பரிந்துரைகளை தொலைபேசி வாயிலாகவோ அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாகவோ சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த 18,035 பேர் மீது வழக்கு