சாலை விபத்துகளை தடுப்பதற்கு போக்குவரத்துத் துறை அலுவலர்கள் பலவித நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி அனைத்து இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனையாளர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில், 'தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 2018இல் நடந்த 33 விழுக்காடு உயிரிழப்புகளில் 73 விழுக்காட்டினர் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததால் நேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது.
2018ஆம் ஆண்டில் சாலை விபத்தை குறைத்ததில் காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, மருத்துவம், போக்குவரத்து துறை, கல்வித் துறை சாதனை படைத்துள்ளது. இதில் புதிதாக வாகனம் வாங்குவோரிடம் விழிப்புணர்வு வழங்கிய டீலர்களுக்கும் பங்கு உள்ளது.
சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும், கார் ஓட்டுவோர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என சாலை பாதுகாப்பு மையங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அறிவுறுத்தப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் வாகன தயாரிப்பாளர், டீலர்கள் வாகனத்தை வாங்குவோரிடம், தலைக்கவசம் சேர்த்து விநியோகிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என கூறப்பட்டுள்ளது.