பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர்.பி உதயகுமார் ஆகிய இருவரையும் சந்தித்து கோரிக்கை தொடர்பான கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒருங்கிணைப்பாளர் மோசஸ், ”2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரை பணி நீக்கம், பணி மாறுதல் உள்ளிட்ட செயல்கள் ஆசிரியர்கள் மீது ஏவப்பட்டன.
இந்த செயலை அரசு திரும்பப் பெற்றுகொள்வதாகவும், ஒன்பது அம்ச கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்து இதற்கான தீர்வு எடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதன் காரணமாக மாவட்டந்தோறும் நாளை நடைபெறவிருந்த ஓர் நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளோம். வரக்கூடிய நாட்களில் கோரிக்கை தொடர்பாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில், வரும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழு கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முடிவு எடுக்கப்படும்” என்றார்.