யுகாதி பண்டிகையை ஆந்திரா-தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில மக்கள் முறையே தெலுங்கு, கன்னட புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இதேபோல், மகாராஷ்டிர மக்கள் இந்நாளை குடிபாட்வா என்றும், சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் கொண்டாடுகின்றனர். மேலும், மணிப்பூர் மக்கள் சாஜிபு நொங்மா பன்பா எனவும், பாலி மற்றும் இந்தோனேசியா வாழ் இந்துக்கள் நைபி என்றும் கொண்டாடிவருகின்றனர்.
எவ்வாறு நாள் கணக்கிடப்படுகிறது?
இந்து சூரியசந்திர நாள்காட்டியின்படி யுகாதி சைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது. இது ஆங்கில நாள்காட்டியில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும்.
எதன் அடிப்படையில் யுகாதி கொண்டாட்டம்?
சைத்ர மாதத்தின் முதல்நாள் பிரம்மன் உலகத்தைப் படைத்ததாகப் பிரம்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையின்படி யுகாதி கொண்டாடப்படுகிறது.
சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பைக் குறிப்பதால் இந்நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
யுகாதியில் என்னென்ன செய்வார்கள்?
மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, வண்ணக்கோலமிட்டு மாவிலைத் தோரணங்களால் வீடுகளை அலங்கரிப்பர்.
மேலும் யுகாதி பச்சடி செய்து அண்டை வீட்டார்கள், நண்பர்களுக்கு அளித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வர்.
சிறப்பு உணவு வகைகள்
யுகாதியின் சிறப்பு உணவு பானமான பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம், உப்பு கலந்து செய்யப்படுகிறது.
இந்தப் பானத்தில் இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு உள்ளிட்ட சுவைகள் கலந்திருக்கும். இந்தச் சுவைகள் புதிய ஆண்டில் மகிழ்ச்சி, துக்கம், அன்பு, துன்பம், பரிவு, நேசம் உள்ளிட்டவையைக் குறிக்கும் அம்சமாக உணர்த்துகின்றன.
இந்நன்னாளில் செய்யப்படும் இன்னுமொரு உணவு வகை பூரண போளி ஆகும். இது மைதா மாவு, வெல்லம், தேங்காய், நெய், பால் ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் சுவையான பதார்த்தமாகும்.