சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவுக்கான கடைசி நாளாக கடந்த ஜூலை 19ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது.
இதனை கருத்தில் கொண்டு, அறிவிக்கப்பட்டு இருந்த கடைசி தேதியை மாற்றி சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாள்கள் அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 22 ந் தேதி வெளியானது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் இந்த படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கு இன்று(ஜூலை 27) இறுதி நாளாகும்.
இதனையடுத்து ஜூலை 26 ந் தேதி மாலை 6 மணி வரையில் 2 லட்சத்து 7ஆயிரத்து 361 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 492 பேர் கட்டணங்களை செலுத்தியுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 369 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை பதிவு செய்த மாணவர்கள் கட்டணங்களை செலுத்துவதற்கு மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 26 ந் தேதி வரையில் 4 லட்சத்து 1 ஆயிரத்து 494 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 132 பேர் விண்ணப்பங்களை முழுவதும் பதிவேற்றி உள்ளனர். அதில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 912 பேர் கட்டணங்களை செலுத்தி உள்ளனர்.பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 27) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்