தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, சென்னை கரோனாவின் கேந்திரமாக மாறியுள்ளது. மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பான்மையானோர் சென்னையைச் சேர்ந்தவர்களாவே உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ஒருபுறம் தொற்று பரவும் வேகம் அதிகரித்தாலும், குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
அதன்படி இன்று மட்டும் தமிழ்நாட்டில் 1,515 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,667ஆக உயர்ந்துள்ளது.
கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,497 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதுதவிர அமெரிக்காவிலிருந்து வந்த நான்கு பேர், குவைத்தில் இருந்து வந்த மூன்று பேர், டெல்லியிலிருந்து வந்த ஆறு பேர், மகாராஷ்டிராவில் இருந்து வந்த இருவர், ரயில்கள் மூலம் ஜம்மு காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த தலா ஒருவர் என 18 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 604 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கரோனாவிலிருந்து இதுவரை 16 ஆயிரத்து 999 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று கரோனா தொற்று காரணமாக 18 பேர் இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் தனியார் மருத்துவமனையிலும், 13 பேர் அரசு மருத்துமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 269ஆக உயர்ந்துள்ளது.