தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய தேர்வாளர்கள் அதிகளவில் முதல் நூறு இடங்களுக்குள் வந்ததாகவும் அவர்கள் முறையாக தேர்ச்சி பெறவில்லை என்றும் எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சிபிசிஐடியினர் மேற்கொண்ட விசாரணையில் இதுவரை இந்த வழக்கில் இடைத்தரகர்கள், முறைகேடாகத் தேர்வு எழுதியவர்கள் உட்பட ஏழு பேரைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பணியாளர், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஓம்காந்தன் என்பவரை கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி கைதுசெய்யப்பட்ட ஓம் காந்தனுடைய வீட்டில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் இரண்டு கைபேசிகளை பறிமுதல் செய்துள்ளதாக சிபிசிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணியில் சேர்ந்த ஓம் காந்தனுக்கு டிபிஐயில் இடைத்தரகராக உள்ள பழனி என்பவர் மூலம் சென்னை முகப்பேரில் குடியிருக்கும் ஜெயக்குமார் 2018ஆம் ஆண்டில் அறிமுகமாகியுள்ளார்.
மேலும் 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியான பிறகு, தனக்குத் தெரிந்தவர் தேர்ச்சி பெறவேண்டும் என்று ஓம் காந்தனிடம் உதவி கேட்டுள்ளார், ஜெயக்குமார். அதற்கு ரூ. 15 லட்சம் பணம் தருவதாகக் கூறி, முன்பணமாக இரண்டு லட்சத்தை ஓம் காந்தனுக்கு ஜெயக்குமார் கொடுத்துள்ளார்.
பின்னர் ஜெயக்குமார் ஓம்காந்தனை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீழக்கரை, ராமேஸ்வரம் பகுதி பணியைத் தேர்வு செய்ய கூறியுள்ளார். தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக ராமேஸ்வரத்திற்கு காரில் சென்ற ஜெயக்குமார், தேர்வு எழுதுபவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, எழுதினால் விரைவில் மறைந்து விடக் கூடிய பேனாக்களை கொடுத்துள்ளார்.
தேர்வு முடிந்த பின்பு ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் இருந்து விடைத்தாள்களை பெற்றுக்கொண்டு சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஒப்படைக்கும் அலுவலருக்கு நியமிக்கப்பட்டிருந்த தட்டச்சர் மாணிக்கவேலுக்கு உதவுவதாக நியமிக்கப்பட்ட ஓம் காந்தனை, தேர்வுக்கு ஒருநாள் முன்னதாக ராமேஸ்வரத்தில் ஜெயக்குமார் சந்தித்துள்ளார்.
அதேபோல் திட்டமிட்டபடி தேர்வு முடிந்த பின்பு அன்று இரவு சுமார் 8 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்திலிருந்து குரூப்-4 விடைத்தாள்களை வாகனத்தில் ஏற்றி சென்னை கிளம்பியுள்ளனர். அந்த வாகனத்தைப் பின் தொடர்ந்து ஜெயக்குமாரும் காரில் சென்று உள்ளார். பின்னர் சுமார் இரவு 10 மணி அளவில் சிவகங்கையைத் தாண்டி ரோட்டோரமாக வாகனத்தை நிறுத்தி, அதில் சென்ற தட்டச்சர் மாணிக்கவேல், விடைத்தாள் வாகன ஓட்டுநர், பாதுகாப்புக்குச் சென்ற காவலர்கள் ஆகியோரையும் ஓம்காந்தன் சாலையைத் தாண்டி எதிர் புறம் இருந்த ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் சென்றுள்ளார்.
இதற்கிடையில் ஓம் காந்தன் நைசாக வெளியே வந்து ஜெயக்குமாருக்கு வண்டியின் பூட்டு சாவியை கையில் கொடுத்து உள்ளார். சாவியைப் பெற்றுக் கொண்ட ஜெயக்குமார் பூட்டைத் திறந்து அதிலிருந்த ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களைச் சேர்ந்த விடைத்தாள்களை எடுத்து கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். அதற்குப் பிறகு உணவகத்துக்குச் சென்று சாப்பிட்டு விட்டு, சுமார் அரை மணி நேரம் கழித்து அனைவரும் அங்கிருந்து சென்னை நோக்கி புறப்பட ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் போகும் வழியில் ஜெயக்குமார் ஓம் காந்தனிடம் விக்கிரவாண்டியில் ஒரு டீக்கடை ஓரம் டீ குடிப்பதற்காக அதிகாலை 5 மணியளவில் வாகனத்தை நிறுத்தச் சொல்லி உள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஜெயக்குமார் திருத்தப்பட்ட விடைத்தாள்களை வாகன அறையில் உள்ளே வைத்து பூட்டி விட்டு, சாவியை ஓம் காந்தனிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்ட விடைத்தாள் வாகனம், அடுத்தநாள் மதியம் 1.30 மணி அளவில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் விடைத்தாள்களை ஒப்படைத்துள்ளார்கள் என்று சிபிசிஐடியினர் தெரிவித்தனர்.
மேலும் இடைத்தரகராக செயல்பட்டு முறைகேடாக தேர்வாளர்கள் வெற்றிபெறச் செய்யப்பணம் பெற்று ஜெயக்குமாரிடம் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாகக் கூறி, தேனி மாவட்டம் உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரராஜ் என்பவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஜெயக்குமார் என்பவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தீவிரமாகத் தேடும் பணியில் தனிப்படை காவல் துறையினர் ஈடுபட்டு வருவதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு மேலும் மூன்று பேர் கைது