2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதில், முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களே அதிகமானோர் எனத் தெரியவந்தது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கல்வியாளர்கள் பலர் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திய டிஎன்பிஎஸ்சி, தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற முதல் 100 பேரில் சந்தேகத்திற்கிடமான 35 பேரை அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், முறைகேடு நடந்திருப்பது உறுதியானதையடுத்து, தமிழ்நாடு காவல் துறை தலைவர் உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் பார்த்தசாரதி, வீர ராஜு ஆகியோரை கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், தேர்வு எழுதியவர்களில் 13 பேர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டு, அவர்கள் தரவரிசைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சில மணி நேரங்களில் மறையக்கூடிய பேனா மையை பயன்படுத்தி விடைத்தாளில் மோசடி செய்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. ஆனால், சிபிசிஐடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓ.எம்.ஆர். விடைத்தாள் அசல்போல் அச்சடிக்கப்பட்டு, சரியான விடைகள் குறிக்கப்பட்டு தேர்வின்போது முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எழுதிய ஓ.எம்.ஆர். சீட்டை மாற்றிவைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இடைத்தரகர்களுக்கு உதவியாக இருந்த டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள், ஓ.எம்.ஆர். விடைத்தாள் தயாரித்தவர்கள், தேர்வு கண்காணிப்பாளர்கள் ஆகியோரை யார் என கண்டுபிடிக்க காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
சிபிசிஐடி நடத்திய விசாரணையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் உதவியாளராகப் பணிபுரியும் ரமேஷ் (39), எரிசக்தி துறையில் பணிபுரியும் திருகுமரன், இந்தத் தேர்வில் வெற்றிபெற்ற நிதீஷ் குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது 14 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் முறைகேடு தொடர்பாக ஒன்பது பேரிடம் சிபிசிஐடி காவல் துறை விசாரணை நடத்தியது.
அப்போது விசாரணையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன் (26), கவுரிபேட்டையைச் சேர்ந்த காலேஷா (29), ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருவேல்முருகன் (31) உள்ளிட்ட மாணவர்கள் குரூப் 4 தேர்வில் முறைகேடுசெய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறை அவர்களைக் கைதுசெய்தது. மாணவர்களிடம் முறைகேடாகப் பணம் பெற்று தேர்ச்சிபெற உதவிய இடைத்தரகரான ஆவடியைச் சேர்ந்த வெங்கட்ரமணன் ( 39) ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
மேலும், இதுவரையில் 7 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.