சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கு 21 தேதி நடைபெறும் முதல் நிலை தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது எனவும், தேர்வர்கள் 8:59 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் எனவும், மையத்தில் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு முகக் கவசம் அணிவது நல்லது என அதன் தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.
சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் அதன் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2 நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு இல்லாத பணிகளுக்கான எழுத்துத் தேர்வு 21ஆம் தேதி நடைபெறுகிறது. நேர்முகத்தேர்வு உடன் கூடிய 116 பணியிடங்களுக்கும் நேர்முகத்தேர்வு அல்லாத 5,413 பணியிடங்களை நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் மாறுதலுக்கு உட்பட்டதாகும்.
5529 பணியிடங்களுக்கான குருப் 2 மற்றும் 2A தேர்வு திட்டமிட்ட படி 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறும். முதல்நிலை தேர்வை எழுத 11, 78,175 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் ஆண்கள் 4,96,247 பேரும், பெண்கள் 6,81,880 தேர்வர்கள், மூன்றாம் பாலினம் 48 மாற்றுத்திறனாளிகள் 14511 நபர்களும், இவர்களில் 1,800 நபர்களுக்கு சொல்வதை எழுதுபவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்விற்கு காலம் தவறாமை அவசியம்: தமிழ் வழியில் படித்ததற்கான முன்னுரிமை கேட்டு 79948 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு பாடத்திற்கு 9 லட்சத்து 46 ஆயிரத்து 589 தேர்வர்கள் பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பாடத்தில் இரண்டு லட்சத்து 31 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வர்கள் 8.30 மணிக்குள் தேர்வு அறைக்குள் வந்துவிட வேண்டும், 8.59 மணிக்கு மேல் வந்தால் அனுமதிக்கப்படாது.
தேர்வு கட்டணத்தில் தளர்வு: தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டத்தில் 117 மையங்களில் 4012 தேர்வு கூடங்களில், 58900 அறையில் தேர்வு நடைபெற உள்ளது. ஒருவர் மூன்று முறை தேர்வு எழுதுவதற்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 693361 பேர் தேர்வு கட்டணம் விலக்கு பெற்றுள்ளனர்.
முதல்நிலைத் தேர்வு கொள்குறி வகையில் நடைபெறும். 200 கேள்விகள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண் வழங்கப்படும். 100 கேள்விகள் பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் மன திறனை சோதிக்கும் வகையில் இருக்கும்.
முதன்மைத் தேர்வில் 100 மதிப்பெண்கள் விவரிக்கும் வகையில் கட்டாயம் தமிழ் பாடத்தில் கேட்கப்படும் அதில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தகுதி பெறுவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,848 நபர்களும் ஊட்டியில் 5624 நபர்களும் குறைந்தபட்சமாக தேர்வு எழுதுகின்றனர்
தேர்வர்கள் செய்யவேண்டியவை: தேர்வு கூட நுழைவு சீட்டு கலர், மற்றும் கருப்பு வெள்ளை என இரண்டும் அனுமதிக்கப்படும். ஹால் டிக்கெட் உடன் ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். குரூப் 2 தேர்வுகளுக்கான முடிவு ஜூன் மாதம் இறுதியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதன்மை தேர்வை வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
தேர்வர்கள் முககவசம் அணிந்து வந்தால் நல்லது, நாங்கள் மாஸ்க் அணிய சொல்லி கட்டாயபடுத்த மாட்டோம்; தேர்வு மையத்திலிருந்து விடைத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு திருத்தப்படும் அதற்கான முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் எழுதும் குரூப் 2 பணிக்கான ஹால்டிக்கெட் வெளியீடு