தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2015 ஜூன் மாதம் துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டது. அதன்படி 2015 நவம்பர் 8ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 பேரில் 62 பேர் மனித நேய பயிற்சி மையம் மற்றும் அப்பல்லோ பயிற்சி மையங்களில் படித்தவர்கள் ஆவர்.
தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் வெளியாகிவிட்டதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வு எழுதிய ஸ்வப்னா என்ற திருநங்கை கடந்த 2017ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முறைகேடு புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனிதநேய பயிற்சி மையம் மற்றும் அப்பல்லோ பயிற்சி மையங்களில் படித்தவர்கள் மட்டுமே அதிகளவில் தேர்ச்சி பெற்று இருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், முறைகேடு செய்ததாக அப்பல்லோ பயிற்சி மையத்தின் இயக்குநர் சாம் ராஜேஸ்வரனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்கில் அவர் முன்ஜாமீன் பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்திய அலுவலர்கள் தொடர்ந்து பணியிட மாறுதல் செய்யபட்டதாகவும், இந்த முறைகேட்டிற்காக பயிற்சி மையங்களில் இருந்து தேர்வாணையத் தலைவர், உறுப்பினர்கள், கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் அமைச்சர் ஆகியோர், மாணவர்களிடமிருந்து தலா 15 முதல் 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் வாதிட்டார். மேலும், இதேபோல் ஒரு வழக்கில் முன்னர் உத்தரவு வழங்கிய உச்ச நீதிமன்றம், தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலக் காவல் துறை விசாரிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், முறைகேடு புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவின் விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், இந்த விசாரணை விரைவில் வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற உள்ளதாகவும் விளக்கமளித்தார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், இதே முறைகேடு தொடர்பாக ஏற்கனவே ஸ்வப்னா தொடர்ந்த வழக்கு, வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்கையும் அதோடு சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர்.
இதையும் படிங்க: 2018 டிஎன்பிஎஸ்சி தேர்விலும் முறைகேடு முயற்சி: விசாரணையில் வெளியான தகவல்