சென்னை: குரூப் 1 பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தேர்வில் தகுதிப்பெற்ற 137 பேருக்கு நேர்காணல் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி ஆகிய பதவிகளில் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் முதல்நிலை தேர்வில் சுமார் 1 லட்சத்து 31,701 பேர் எழுதியது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வுக்கு 3 800 பேர் தேர்வுசெய்யப்பட்ட நிலையில், 2022 மார்ச் 4,5,6 ஆகிய 3 நாட்களுக்கு இந்தத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டது.
தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. 137 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் ஜூலை 13,14,15 ஆம் தேதிகளில் Oral test நடத்தப்படும். அன்று தேர்வர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: MANDO ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் உயர் கல்வித்துறை ஒப்பந்தம்